சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள ஆணை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும்

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள ஆணை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2018-04-09 23:00 GMT
சென்னை, 

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன என்பது பற்றி வரைவு செயல் திட்டம் ஒன்றை மத்திய அரசு மே மாதம் 3-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வெளிப்படையாக மத்திய அரசிடம் கேள்வியெழுப்பி, கண்டித்திருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. மேலும், மே மாதம் 3-ந் தேதி வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலஅவகாசம் கொடுத்திருப்பதில், தமிழக மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசு கடைசி நேரத்தில் காலஅவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதே, முழுக்க முழுக்க இதற்கு காரணம் என்பதுதான் உண்மை. அதாவது, ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் அடங்கியது தான் என்பதை உச்சநீதிமன்றம் மிகவும் தெளிவாக அறுதியிட்டு கூறியிருக்கிறது.

எங்களை பொறுத்தவரையில் காவிரி மீட்பு பயணம் 12-ந் தேதி வரை தொடர்கிறது. 13-ந் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி நாங்கள் செல்கிறோம். விரைவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.

பொதுவாக விளையாட்டு வீரர்களை, விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்துவது என்பது கடமை. அதே நேரத்தில், இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்ற தங்கள் உணர்வை, ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது வெளிப்படுத்தி, அழுத்தம் கொடுத்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

சுப்ரீம் கோர்ட்டின் ஆணை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் நடவடிக்கைகளில் தாமதத்தையும், தமிழகத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விரைவுபடுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தனி மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த சிக்கல் மே மாதத்தை கடந்தும் நீடிக்குமானால் குறுவை சாகுபடிக்கான தண்ணீரைப் பெறுவதற்கான இடைக்கால ஆணையையாவது பெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

காவிரி பிரச்சினையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகின்ற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அமைந்துள்ளது. இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. இத்தகைய பின்னணியில், தமிழகத்தில் இருக்கிற அனைவரும் ஒன்றுபட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை உறுதியாக போராட்டத்தை தொடர வேண்டும் என்று அனைத்து பகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-

சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்பு ஏமாற்றத்தைத்தான் நமக்கு தருகிறது. 6 வார அவகாச காலம் கூறியதைக் கண்டுகொள்ளாததுபோல் உள்ளதோடு, மே 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து, மத்திய அரசிடம் வரைவுத் திட்டத்தை கேட்பது பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக, மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு மறைமுகமான இசைவையும், இணக்கத்தையும் தான் தருவதாக அமைந்துள்ளதுபோல் தோன்றுகிறது.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்:-

சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த 2-வது வாய்ப்பினை ஏற்று, வரும் மே மாதம் 3-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த செயல் திட்டத்தினை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். 

மேலும் செய்திகள்