காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார், தியாகம் செய்துவிட்டு இல்லை தமிழிசை காட்டம்
காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார், தியாகம் செய்துவிட்டு கிடையாது என தமிழிசை பேசிஉள்ளார். #TamilisaiSoundararajan #Cauvery #DMK
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு 6 வார கால அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது. இதனையும் விமர்சனம் செய்து வரும் எதிர்க்கட்சிகள் 6 வார காலங்களில் சந்தேகம் வரவில்லையா? என மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பி வருகிறது. போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் பாரதீய ஜனதா கட்சி, காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார், தியாகம் செய்துவிட்டு கிடையாது என தமிழிசை பேசிஉள்ளார்.
சென்னையில் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. தமிழகத்திற்கு காவிரி நீரை கொண்டுவரப்போவது பாரதீய ஜனதா கட்சிதான். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும், அதுவரையில் ஸ்டாலின் சிறையில்தான் இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்பதில் இடையூறாக இருக்கும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என கூறும் ஸ்டாலின்தான் தமிழின துரோகியாவார். பிரதமர் மோடியால்தான் காவிரி தமிழகத்தில் பாயப்போகிறது என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் தரப்பில் இன்று நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசுகையில், ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிஉள்ள தமிழிசை, ராணுவத்திற்கு பயப்படாதவர், ஐடி வந்தால் எப்படி பயப்படுவார் என்பது தெரியும் என குறிப்பிட்டு உள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தமிழிசை, 40 வருடங்களுக்கு முன்னதாக உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் எப்படி இருந்து இருப்பீர்கள் என கேள்வியை முன்வைத்து உள்ளார். திரிபுராவில் காவி ஆட்சியை பிடித்தது போன்று தமிழகத்திலும் காவி ஆட்சியை பிடிக்கும் என கூறிஉள்ளார் தமிழிசை.