ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு; நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. #SterliteProtest

Update: 2018-04-04 11:46 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் இன்று 52வது நாளாக தொடருகிறது.  அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் இந்த  போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அதே பகுதியை சேர்ந்த பண்டாரம்பட்டி கிராம மக்கள் கடந்த 1ந்தேதி போராட்டத்தில் குதித்தனர்.  அவர்களது போராட்டம் இன்று 4வது நாளாக நீடிக்கிறது.

இதனிடையே தூத்துக்குடி அருகே உள்ள மேலும் ஒரு கிராமம் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வடக்கு சங்கரப்பேரி கிராம மக்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு திரண்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கண்டன கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதேபோன்று குமரெட்டியாபுரம் மக்களுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்குவீரபாண்டியபுரம் கிராம மக்களும் நேற்று போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்