தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை:இன்று புனித வெள்ளிக்கிழமை

இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க தினமாக கடைபிடிக்கின்றனர்.

Update: 2018-03-29 20:44 GMT
சென்னை,

இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க தினமாக கடைபிடிக்கின்றனர்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் அருகே உள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அவர் மக்களுக்கு பல்வேறு ஆன்மிக கருத்துகளை போதித்து வந்தார். போதனைகளை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் நோன்பு இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இயேசுவை கைது செய்தனர். மக்கள் ஒருமித்து கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயேசுவை 2 கள்வர்களுக்கு நடுவே சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.

இயேசுவை கொலை செய்வதற்கு முன்பு போர்ச் சேவகர்கள் அவருக்கு முள்கிரீடம் சூட்டி, சிலுவையை சுமக்க வைத்து, வழிநெடுக நடக்கச் செய்தனர். சிலுவையில் அவர் குற்றுயிராய் 3 மணிநேரம் தொங்கினார். அப்போது 7 வசனங்களை இயேசு பேசினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும் இயேசுவுக்கு நேரிட்ட இந்த சம்பவங்களை நினைவுகூர்வதற்காக 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து தியானித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நோன்பு இருக்கின்றனர்.

தவக்கால இறுதியில் வரும் புனித வெள்ளிக்கிழமையில் (இன்று), இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் 3 மணிநேரம் சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு ஆராதனையில், சிலுவையில் இயேசு கூறிய 7 வசனங்களின் அடிப்படையில் சபை பாதிரியார்கள், மூப்பர்கள் பிரசங்கம் செய்வார்கள். துக்கமான பாடல்களை தேவாலயங்களில் பாடுவார்கள்.

சில தேவாலயங்களில் சிலுவைக் காட்சிகளை சபை மக்கள் நடித்துக் காட்டுவதும்உண்டு.

புனித வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட இயேசு, 3-ம் நாளில் உயிர்த்தெழுந்தார். அந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

மேலும் செய்திகள்