மன உளைச்சலால் போலீஸ்காரர்கள் தற்கொலை: விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கெடு

மன உளைச்சலால் போலீஸ்காரர்கள் தற்கொலை செய்துகொள்வதால், பணியை வரையறை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கெடு விதித்தது. #HighCourt

Update: 2018-03-08 22:15 GMT
சென்னை, 

மன உளைச்சலால் போலீஸ்காரர்கள் தற்கொலை செய்துகொள்வதால், பணியை வரையறை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கெடு விதித்தது.

சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டருக்கும் உள்ள கள்ளதொடர்பு குறித்தும், அதனால் தன்னுடைய 2 மகன்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை 2012-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்த நீதிபதி என்.கிருபாகரன், சில உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்து இருந்தார். ‘போலீசாருக்கு பணி சுமை அதிகம் உள்ளது. இவர்களது பணி குறித்து வரையறை செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஏன் அமைக்கக்கூடாது? என்று அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அரசு வக்கீல் கே.பிரபாகரன், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அரசு வக்கீலிடம் சரமாரியாக கேள்வி கேட்டு நீதிபதி என்.கிருபாகரன் கூறியதாவது:-

2012-ம் ஆண்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு, இதுவரை ஏன் பதில் அளிக்கவில்லை? ஒரு குற்ற சம்பவம் நடந்துவிட்டால், போலீசார் என்ன செய்தார்கள்?, எங்கே போனார்கள்? என்று கேள்வி கேட்கிறோம். போலீசார் மீது குற்றம் சுமத்துகிறோம்.

ஆனால், போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது. அவர்கள், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும். வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு, போலீசார் பலர் தற்கொலை செய்கின்றனர்.

பண்டிகை காலத்தில் அவர்களுக்கு ஓய்வு இல்லை. அரசு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக உள்ள இந்த காலத்தில், கிடைத்த போலீஸ் வேலையை விட்டு பலர் ஓடுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 19 ஆயிரத்து 300 போலீஸ்காரர்கள் வேலையை விட்டு சென்றுள்ளனர். இதற்கு காரணம் என்ன?.

வி.ஐ.பி. வரும் சாலையோரம் போலீசார் தினமும் எதற்காக நிறுத்தி வைக்கப்படுகின்றனர்?. ஆண்டுக்கு எத்தனை நாள் போலீசாருக்கு விடுமுறை விடப்படுகிறது? வக்கீல்கள் போராட்டம் நடத்தினால், கோர்ட்டு செயல்படும். ஒரு மணி நேரம் போலீசார் போராட்டம் நடத்தினால், இந்த சமுதாயம் என்ன ஆகும்? போலீசாரும், அவர்களது குடும்பமும் நன்றாக இருந்தால் தான், நாம் பயம் இல்லாமலும் வாழ முடியும்.

நான் போலீசாரை புகழ்ந்து பேசுகிறேன் என்று நினைக்கக்கூடாது. அந்த போலீஸ் துறையிலும் மனித உரிமை மீறல், லஞ்சம் வாங்குவது போன்ற செயல்கள் நடக்கத்தான் செய்கிறது.

ஒரு ரவுடிக்கு, இன்ஸ்பெக்டர் ‘கேக்’ ஊட்டி விடும் சம்பவம் எல்லாம் தமிழகத்தில் நடக்கத்தான் செய்கிறது. அதற்காக ஒட்டுமொத்த போலீசாரையும், மன உளைச்சலுடன், வேலை பளுவுடன் பணி செய்ய கட்டாயப்படுத்த முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழக அரசு அமைக்க போகிறதா?, இல்லையா?.

உடனே அரசு வக்கீல் பிரபாகரன் எழுந்து, அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என்றார்.

அப்போது ஒரு வக்கீல் எழுந்து, ‘போலீசாரின் உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு முறையாக வழங்கப்படுவதில்லை. மதுரையில் ஒரு போலீஸ்காரருக்கு திருமணத்துக்கூட விடுப்பு வழங்கவில்லை. போலீஸ் சங்கம் அமைப்பதற்கும் அனுமதி இல்லை’ என்றார்.

அதற்கு நீதிபதி, ‘போலீஸ் சங்கம் தேவையில்லை. ஏற்கனவே, அ.தி.மு.க. ஆதரவு போலீஸ், தி.மு.க. ஆதரவு போலீஸ், சாதி ரீதியான போலீஸ் என்று பல பிரிவுகளாக போலீசார் செயல்படுகின்றனர். இனியும் காலம் தாழ்த்த முடியாது. இந்த வழக்கை 19-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆணையத்தை ஐகோர்ட்டே அமைக்கும்’ என்று நீதிபதி என்.கிருபாகரன் கெடு விதித்தார்.

மேலும் செய்திகள்