அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினரில் இருந்து புகழேந்தி,நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி நீக்கம்
அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர்களில் இருந்து புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது
ஆர்.கே.நகரில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும் அணி தாவலை தடுப்பது குறித்தும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு மணி நேரமாக கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் , ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்தீபன், பாப்புலர் முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்களை நீக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் சில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. வீரமணி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி பங்கேற்கவில்லை.
இது போல் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தி தொடர்பாளர்கள் நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
அதிமுகவில் கட்சியின் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், பாப்புலர் முத்தையா, புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உட்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பார்த்திபன், ரங்கசாமி பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யபட்டு உள்ளனர்.