டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரை விலைபேசி வாங்கிவிட்டார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரை விலை பேசி வாங்கிவிட்டார், இதற்காக பா.ஜ.க.வை குறை சொல்ல கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

Update: 2017-12-24 20:15 GMT
சென்னை,

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் முடிவுகளால் எல்லா கட்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதைவிட மேலாய் தமிழகமே மாபெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. பணம் இருந்தால் தேர்தல் வெற்றியையும், பதவியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது மறுபடியும் தமிழக அரசியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.கே.நகர் விற்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தினகரன் ஆர்.கே.நகரில் சுயேச்சையாக நிற்கப்போகிறார் என்ற உடனேயே அந்த தொகுதியை விலை பேசி வாங்க போகிறார் என்ற நிலை தான் ஆரம்பத்திலே உருவானது. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க. சாலை மறியலில் ஈடுபட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக யாருடைய கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வும், தமிழகமும் இயங்கியதோ அதே குடும்பத்தின் பிடியில் மீண்டும் சிக்கி இருப்பதை ஆர்.கே.நகர் மக்கள் எப்படி ஒப்புக்கொண்டார்கள்? எனவே தார்மிக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஆர்.கே.நகர் தோற்றுவிட்டதே என்ற ஆதங்கம் எனக்கு.

இந்த தேர்தலில் தினகரன் வெற்றியும் நடந்த நடைமுறைகளும் தமிழகத்தில் உள்ள அத்தனை தலைவர்களுமே கவலையோடு உற்றுநோக்கி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனை சமூக அக்கறையோடு ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் அணுகவேண்டிய நேரம் இது என்பதே என் கருத்து.

தி.மு.க.வும் அதன் கூட்டணி தலைவர்களும் தாங்கள் ஏன் டெபாசிட் மீட்டெடுக்காமல் போனது என தங்களை சுய பரிசோதனை செய்யாமல் இதிலும் பா.ஜ.க.வை குறை சொல்லுவது தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க. ஜனநாயக கடமையாற்ற களத்தில் இருக்க வேண்டும் என்றே தேர்தலில் போட்டி போட்டோம். ஆனால் களங்கப்படாமல் களப்பணியாற்றினோம். அப்போது தான் பிற கட்சிகளால் களங்கப்பட்ட களத்தையும் எங்களால் உணர முடிந்தது.

ஆக பா.ஜ.க.வை பொறுத்தவரையில் நங்கள் மீண்டெழுந்து வெற்றி பெறுவோம். தற்போது நடந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் 3 தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை போல் வருங்காலத்தில் தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உண்டு. அந்த காலம் தான் தமிழகத்தின் பொற்காலமாக அமையும் என்பது உறுதி.

தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் நேர்மையான, திறமையான சேவை செய்யும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நோட்டாவுக்கு போடுவதால் நல்ல வேட்பாளர்கள் கூட புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

வருங்காலத்தில் மக்கள் மனநிலை மாறும் என நம்புகிறோம். நாளை நமதே. நல்லதே நடக்கும் காத்திருப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்