நோட்டாவை விட குறைவான ஓட்டு பாரதீய ஜனதாவுக்கு ‘டெபாசிட்’ கிடைக்காது

நோட்டோவை விட குறைவான ஓட்டு வாங்கிய பாரதீய ஜனதாவிற்கு டெபாசிட் கிடைக்காது.

Update: 2017-12-24 09:29 GMT

சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதா வேட்பாளரான கரு. நாகராஜன் பின்தங்கியே காணப்பட்டார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் தினகரன் முதல் இடத்திலும் அ.தி.மு.க. 2-வது இடத்திலும், தி-.மு.க. 3-வது இடத்திலும் இருந்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக 4&வது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்தது. பா.ஜனதா வேட்பாளரான கரு. நாகராஜன் முதல் சுற்றில் வெறும் 66 வாக்குகளை பெற்றிருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் பா.ஜனதா வுக்கு குறைவான ஓட்டுகளே கிடைத்தன. இதனால் பா.ஜனதா வேட்பாளரான கரு. நாகராஜன் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 1,76,885 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. ஒரு வேட்பாளர் டெபாசிட் பெற பதிவான ஓட்டில் 6-ல் ஒரு பங்கு ஓட்டு வேண்டும். அதாவது 29,481 ஓட்டுகள் வாங்கினால் தான் டெபாசிட் தொகை தப்பும். ஆனால் பா.ஜ.க.வு-க்கு இந்த ஓட்டுக்கள் கிடைக்கவில்லை.

தேசிய கட்சியான பாரதீய ஜனதாவை விட நோட்டா வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்தது.  ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் நோட்டாவை விட பா.ஜனதா பின்தங்கியே இருந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜனதா தமிழகத்தில் கால் பதிப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அக்கட்சிக்கு அக்னி பரீட்சையாக காணப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 10-வது சுற்று முடிவில் பா.ஜனதா நோட்டாவைவிட 525 வாக்குகள் பெற்று உள்ளது. திமுகவும் குறைந்த அளவு வாக்குகளை பெற்றே மூன்றாவது இடத்தில் உள்ளது.

10-வது சுற்று முடிவு விபரம்:-

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 48,808
மதுசூதனன் (அதிமுக) - 25,367
மருதுகணேஷ் (திமுக) - 13,015
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 2,116
கரு. நாகராஜன் (பாஜக)- 626
நோட்டா- 1,151

மேலும் செய்திகள்