ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-23 21:00 GMT
சென்னை,

சென்னை மறைமலைநகரில் நிம்ரோட் என்ற காண்டிராக்டர் அமைத்த சாலை தரமில்லாமல், சேதமடைந்து விட்டதாக மறைமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியது. அந்த சாலையை நிம்ரோட் சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறி அவரது காண்டிராக்ட் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் பேரூராட்சி நிர்வாகம் சேர்த்தது.

மேலும், பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைத்ததில் ஏற்பட்ட செலவு தொகையை காண்டிராக்டர் நிம்ரோட்டிடம் இருந்து வசூலிக்க மறைமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிம்ரோட் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகையில் தான் சாலை அமைக்கப்பட்டதாகவும், அதிக போக்குவரத்து காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாகவும் நிம்ரோட் தரப்பு வக்கீல் வாதாடினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தனது உத்தரவில், ஆசியாவிலேயே ஊழல் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்வதாகவும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதாக வழக்கு ஒன்றில் நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, தமிழகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது என்பது துரதிஷ்டவசமானது என்றும், ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்