நாடு முழுவதும் 26-ந்தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்படும் அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி இந்தியா முழுவதும் பட்டாசு ஆலைகளை வருகிற 26-ந்தேதி முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Update: 2017-12-23 21:15 GMT
சிவகாசி,

பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி இந்தியா முழுவதும் பட்டாசு ஆலைகளை வருகிற 26-ந்தேதி முதல் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

புகை மாசு ஏற்படுவதாக கூறி கடந்த தீபாவளியின்போது டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை எப்படி சந்திப்பது என்பது குறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை செய்தனர்.

இதற்கிடையே சிவகாசியில், அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு சம்மேளன (டான்பாமா) தலைவர் ஆசைத்தம்பி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

பட்டாசு தொழிலுடன் தொடர்புள்ள மற்ற தொழிலை சேர்ந்த சங்க நிர்வாகிகளிடம் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்துள்ளோம். போராட்டம் என்று இதனை அறிவிக்க முடியாது. தொழிலை தொடர்ந்து நடத்த முடியாததால் நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளோம். தற்போது ஆய்வில் டெல்லி மாசுக்கு பட்டாசு 1 சதவீதம் கூட காரணம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

டெல்லி உள்பட பல இடங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்ததால் பெரிதும் சிரமப்படுகிறோம். இதனால் பட்டாசு தொடர்பான வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அந்த தீர்ப்பில் பட்டாசால் புகை மாசு ஏற்படுகிறது என்று கூறினால் நாங்கள் தொழிலை நிறுத்திவிடுகிறோம். பட்டாசால் மாசு இல்லை என்று கூறினால் நாங்கள் தொழிலை தொடர்ந்து நடத்துகிறோம்.

எனவே மத்திய, மாநில அரசுகளும், சுப்ரீம் கோர்ட்டும் எங்களது தொழிலை கருணையுடன் பார்க்க வேண்டும். 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். 28-ந் தேதி சிவகாசியில் அகில இந்திய அளவில் வாடிக்கையாளர்கள் சங்க கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்