2ஜி வழக்கில் விடுதலை: கனிமொழி, ஆ.ராசா சென்னையில் கருணாநிதியிடம் ஆசி பெற்றனர்

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

Update: 2017-12-23 23:45 GMT
சென்னை,

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். முன்னதாக விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்புக்கு பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று கனிமொழி எம்.பி. மற்றும் ஆ.ராசா சென்னை திரும்பினர். கனிமொழியை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கனிமொழி, ஆ.ராசா வருவதை அறிந்த தொண்டர்கள் காலையிலேயே கோபாலபுரத்தில் திரண்டனர். கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து அந்த பகுதியில் ஏராளமான போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. மதியம் 1.50 மணி அளவில் கனிமொழி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்களை நோக்கி கை அசைத்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

பின்னர் வீட்டுக்குள் சென்ற கனிமொழி, கருணாநிதியை சந்தித்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை கூறி ஆசி பெற்றார். இதைக்கேட்ட கருணாநிதி புன்னகைத்தபடியே கனிமொழிக்கு உச்சி முகர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழிக்கு ஆள் உயர மாலையை தொண்டர்கள் அணிவித்து மகிழ்ந்தனர்.

சிறிது நேரத்தில் ஆ.ராசாவும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கருணாநிதிக்கு பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றார். கருணாநிதியின் கைகளில் அவர் முத்தமிட்டார். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மகிழ்ச்சியில் இருந்த கருணாநிதியும் வீட்டின் வாசல் வரை வந்து தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கை அசைத்தார். அப்போது வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கனிமொழி சி.ஐ.டி. காலனியில் உள்ள அவருடைய இல்லத்துக்கு புறப்பட்டார். அந்த பகுதி பூக்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் திரண்டு வந்து கனிமொழிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும், பொன்னாடைகள் அணிவித்தும் வாழ்த்து கூறி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

முன்னதாக கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு வரவேற்பு கொடுக்க விமான நிலையத்தில் தொண்டர்கள் காலை முதலே குவியத் தொடங்கினார்கள். தாரை தப்பட்டை, கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என விமான நிலையமே ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், மீனம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவர்களை வரவேற்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், பூங்கோதை எம்.எல்.ஏ., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் விமான நிலையம் வந்தனர்.

மு.க.ஸ்டாலினுடன் வந்த பாதுகாப்பு வீரர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு, பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பகல் 12.05 மணிக்கு டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் இருந்து கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் இறங்கினார்கள். நேராக இருவரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மு.க.ஸ்டாலின் கனிமொழிக்கும், ஆ.ராசாவுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலினை கனிமொழி ஆரத்தழுவிக் கொண்டார். அவரது முதுகை மு.க.ஸ்டாலின் தட்டிக்கொடுத்தார். பின்னர், தி.மு.க. நிர்வாகிகள் இருவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் வெளியே வந்தனர். தொண்டர்கள் ஆ.ராசாவை தோளில் சுமந்து கொண்டு மேடைக்கு தூக்கிவந்தனர். கனிமொழியும் தொண்டர்கள் புடைசூழ மேடைக்கு வந்தார். மேடையில் நின்றபடி இருவரும் தொண்டர்களிடம் இருந்து சால்வை, பூங்கொத்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டனர்.

சுமார் அரை மணி நேரம் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து காரில் கோபாலபுரம் புறப்பட்டனர். முன்னதாக ஆ.ராசா நிருபர்களிடம் கூறும்போது, “வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட எங்களை விமான நிலையம் வந்து தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும் செய்திகள்