ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்தவர்கள் வெற்றி பெறுவார்கள் சீமான் பேட்டி

முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுதினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

Update: 2017-12-23 19:00 GMT
சென்னை, 

முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுதினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கக்கன் உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்து துளியும் களங்கமற்று மக்கள் சேவை செய்து, தூய்மை, நேர்மை, எளிமை போன்றவற்றின் உருவமாய் திகழ்ந்தவர் கக்கன்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்தவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அவர்கள் ஒருபோதும் மக்களுக்கு சேவையாற்ற முன் வரமாட்டார்கள். பல வாக்குச்சாவடிகளில் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தையே ஒட்டவில்லை என்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நேர்மை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்தலில் இவர்கள் வென்றால் ஜனநாயகம் தோல்வியடைந்துவிடும். இந்த அமைப்பு முறையே மொத்தமாய் பிழையாக இருக்கிறது. நாங்கள் இவை யாவற்றிற்கும் எதிராக உண்மையும், நேர்மையுமாக மண்ணுக்கும், மக்களுக்கும் உழைக்கக்கூடிய ஒரு இளம் தலைமுறையை தூய அரசியலின் தொடக்கமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்