அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் வகையில் தி.மு.க. எழுச்சியுடன் வீறுநடை போடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

அடுத்தடுத்து வெற்றிகள் தொடரும் வகையில் தி.மு.க. எழுச்சியுடன் வீறுநடை போடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-12-22 23:15 GMT
சென்னை,

அடுத்தடுத்து வெற்றிகள் தொடரும் வகையில் தி.மு.க. எழுச்சியுடன் வீறுநடை போடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எத்தனை அவதூறுகள், எத்தகைய அவமானங்கள்.. என்னென்ன பழிச்சொற்கள்! அத்தனையையும் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் வென்றுகாட்டி, நீதியின் முன் தனது களங்கமற்ற தன்மையை நிரூபித்துள்ளது தி.மு.க. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பு, தி.மு.க. மீது நிரந்தரமான ஒரு கறையை படிய வைத்து குற்றவாளி கூண்டிலேயே நிறுத்தி விடலாம் என நினைத்தவர்களுக்கு எல்லாம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

ஆ.ராசாவும், கனிமொழியும் மாதக்கணக்கில் சிறைப்பட நேர்ந்தபோதும், ஊடகங்களில் உண்மை மறைக்கப்பட்டு, அவதூறுகள் பரப்பப்பட்ட நிலையிலும், அதன் காரணமாக தேர்தல் களங்களில் தி.மு.க. பின்னடைவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், 2ஜி வழக்கை உறுதியுடன் தி.மு.க. எதிர்கொண்டது.

1,200 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டுகளை அலசி, ஆராய்ந்து தீர்ப்பை எழுதியிருக்கும் நீதிபதி ஓ.பி.ஷைனி குறிப்பிட்டிருக்கும் சில வாசகங்கள், இந்த வழக்கின் அரசியல் பின்னணியையும், சதிச்செயல்களையும் அறிந்துகொள்ள உதவுகிறது.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு (சி.பி.ஐ.) தவறிவிட்டது, இந்தக்குற்றச்சாட்டே கற்பனையான குற்றச்சாட்டு. எவ்வித முகாந்திரமும் இல்லை, குற்றப்பத்திரிகை தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை, விசாரணையின்போது சாட்சிகள் வாய்மொழியாக அளித்த சாட்சியங்களுக்கும், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடுகள் நிறைய இருந்தன. விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முடக்கப்பட்ட சொத்துகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தனது நெடிய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துகளின் மூலம், இந்திய அளவில் தி.மு.க.வை பழிவாங்க, 2ஜி வழக்கு எந்தளவுக்கு புனையப்பட்டது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நெடிய சட்டப்போராட்டத்தில் தி.மு.கழகத்தின் பக்கம் நின்றவர்களை எல்லாம் என்றைக்கும் மறக்க முடியாது. 2ஜி விவகாரம் பூதாகரமாக கிளப்பப்பட்டபோதே, இது வெறும் புஸ்வாணம்தான் என பல கூட்டங்களை நடத்தி, மக்களுக்கு விளக்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுபோலவே, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உள்ளிட்ட பலரும் இந்த நியாயமான தீர்ப்பை வரவேற்றுள்ளனர். அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

கற்பனை குதிரையில் சவாரி செய்து, தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என மனப்பால் குடித்த அரசியல் எதிரிகளுக்கும் இனப்பகைவர்களுக்கும், நீதியின் துணையுடன் தி.மு.க. பதிலடி தந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வெற்றிக் கொண்டாட்டமாக தி.மு.க. முன்னெடுக்கும். கருணாநிதி சொன்னது போல, அநீதி வீழ்ந்து, அறம் வென்றுள்ளது. அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் வகையில் தி.மு.க. எழுச்சியுடன் வீறுநடை போடும். எதிரிகளின் எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாகும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்