ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாலேயே நவம்பரில் சசிகலாவால் வீடியோ எடுக்கப்பட்டது - டிடிவி தினகரன்

ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாலேயே நவம்பரில் சசிகலாவால் வீடியோ எடுக்கப்பட்டது என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.

Update: 2017-12-21 13:09 GMT

சென்னை,


காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியை நேற்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டது பெரும் சர்ச்சையாகியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. வெற்றிவேலுக்கு எதிராக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அப்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது குறித்து பேசினார். 

டிடிவி தினகரன் பேசுகையில் ஆர்.கே.நகரில் தனக்காக பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

பின்னர் பேசுகையில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ பிப்ரவரியில் இருந்து எங்களிடம்தான் உள்ளது. வேட்பாளராக இருந்ததால் என்னால் வீடியோ தொடர்பாக கருத்தை தெரிவிக்க முடியவில்லை. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக அமைச்சர்கள் பலருக்கு முன்னதாகவே தெரியும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பொய்யாக பிரசாரம் செய்து சசிகலாவிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்தனர். ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளிவிட எனக்கு விருப்பம் கிடையாது. வெற்றிவேலிடம் வீடியோ பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்டது. வெற்றிவேல் ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. 

அவர் அரசியல் சார்பற்று எனக்கு நீண்டகால நண்பர் ஆவார். ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டது தொடர்பாக அவரிடம் கேட்டுக்கொண்டேன். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டது களங்கப்படுத்தியதாக பார்க்கவில்லை என குறிப்பிட்டார் டிடிவி தினகரன். வீடியோ வெளியீடு குறித்து எனக்கும், சசிகலாவுக்கும் தெரியாது, தொலைக்காட்சிகளில் பார்த்த பின்புதான் தெரியவந்தது. சசிகலா மீது கொலைப்பழி தொடர்ந்து சுமத்தப்பட்டதால் வெற்றிவேல் கோபத்தில் இருந்தார். வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது சரியா, தவறா என்பது குறித்து கவலையில்லை. 

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வழங்கக் கோரி சம்மன் அனுப்பினால் விசாரணை ஆணையத்திடம் வழங்குவேன் என தெரிவித்திருந்தேன் எனவும் குறிப்பிட்டார். 

ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டுதான் வாக்குபெற வேண்டும் என விரும்பவில்லை என டிடிவி தினகரன் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிவருகிறார். 
 

மேலும் செய்திகள்