போயஸ் கார்டனில் இருந்த சசிகலா உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் தீபா கோரிக்கை
போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்த அனைவரிடமும், சசிகலா குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் தீபா கூறினார்.
சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜே. தீபா இன்று ஆஜரானார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. ஜெயலலிதா வீட்டில் இருந்த ஒரு நபர் தங்களுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அளித்துள்ளார்.
போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த ராஜம்மாளை விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என கூறினார். தீபாவிடம் சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.