ஆதரவாளர்கள் கைது ; ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்; ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார் தினகரன்
தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்.கே.நகரில் தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகார் எதிரொலியாக, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. வரும் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.தேர்தல் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் சுயேட்சையாக தினகரனும் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 59 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.
திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் ஒவ்வொரு வகையில், தங்களது வலிமையை நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. எனவே இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த முறை பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், இந்த முறை பணப்பட்டுவாடாவைத் தடுத்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இருந்தாலும் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியவில்லை என புகார் எழுந்து உள்ள்து. ஒரு ஓட்டுக்கு சுயேச்சை வேட்பாளர் தரப்பில் ரூ.8 ஆயிரமும், வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ள கட்சி தரப்பில் ரூ.5 ஆயிரமும், வெற்றியை தட்டிப் பறித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ள கட்சி தரப்பில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும், தெருவுக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் ஆதரவாளர்கள் சிலர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள், ஆர்.கே.நகரில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தனது ஆதரவாளர்கள் கைது செய்யபட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்திக்கிறார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை பிற்பகல் 1 மணிக்கு சந்திக்கிறார் தினகரன்