7 மணி நேரம் ஆம்புலன்ஸ் வராததால் சிறுநீரகம் செயலிழந்த மாணவி உயிரிழந்தார்

சென்னைக்கு அழைத்து வர 7 மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் மாணவி உயிரிழந்தார்.

Update: 2017-12-10 21:45 GMT
காஞ்சீபுரம்,

சிறுநீரகம் செயலிழந்த மாணவியை மேல் சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரை செய்தும், சென்னைக்கு அழைத்து வர 7 மணி நேரத்துக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராததால் மாணவி உயிரிழந்தார்.

காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையில் வசிக்கும் நெசவாளர் ஆனந்தன். இவரது மகள் சரிகா (வயது 16) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சரிகாவுக்கு ஒரு வருடத்துக்கு மேல் 2 சிறுநீரகமும் செயலிழந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று அந்த சிறுமிக்கு திடீரென்று உடல்நிலை மோசமானதால் மதியம் 12 மணி அளவில் டாக்டர் மேல் சிகிச்சைக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படி பரிந்துரை செய்தார்.

உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தும் பல மணி நேரமாக மாணவியை சென்னைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் சுமார் 7 மணி நேரமாக பெற்றோர் மருத்துவமனையில் தவித்துக்கொண்டிருந்தனர். பலமுறை மருத்துவர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

இறுதியில் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர். கலெக்டர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பினார். அந்த ஆம்புலன்ஸ் மூலம் சரிகா மேல் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

ஆனால் வழியிலேயே சரிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சரிகாவின் பெற்றோர் கதறி அழுதனர். தகவல் தெரிவித்த உடன் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் தங்கள் மகளை காப்பாற்றி இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்