ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிகள் மீறப்படுவதை அதிகாரிகள் கவனிப்பதில்லை என்று இந்திய தேர்தல் கமிஷனிடம், தேர்தல் பார்வையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Update: 2017-12-09 23:00 GMT
சென்னை,

இதனால் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி மாற்றப்பட்டுள்ளார். அந்தத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதை போலீசாரும், மற்ற தேர்தல் அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என்று இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தொகுதிக்குள் கொண்டு வருகின்றனர் என்றும், ஆனால் அந்த விதி மீறல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் தேர்தல் பார்வையாளர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் அழைத்து அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். தேர்தல் விதிமீறல் குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

அனுமதி பெறாமல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது யாருடைய பயன்பாட்டுக்காக வந்தது என்பதை பற்றிய விசாரணை நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை 19-ந்தேதி மாலை 5 மணிவரை வெளியிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பார்வையாளர்கள் புகாரைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

முன்பு நடந்த இடைத்தேர்தலின்போதும் பணப்பட்டுவாடாவை தடுக்கப்படவில்லை என்ற புகாரும் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், அ.தி.மு.க. சார்பில் ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரசாரத்துக்காக குறிப்பிட்ட இடத்தில் குறுகிய இடைவெளியில் வேறு கட்சியினருக்கு அனுமதி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்