புதிய ஊழல் பட்டியல் கவர்னரிடம் இன்று வழங்கப்படும் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
புதிய ஊழல் பட்டியல் கவர்னரிடம் இன்று வழங்கப்படும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.;
சென்னை,
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) சந்தித்து, புதிய ஊழல் பட்டியலை வழங்க இருப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த 2011–ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைந்த நாள் முதல் இன்று வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டாமல் ஊழலில் மட்டுமே அரசு தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையான பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்நாடு, இன்று ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையில் தள்ளாடிக்கொண்டு இருப்பதற்குக் காரணம் ஊழல் தான். தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் நீடிக்கும் வரை தமிழகத்திற்கு வளர்ச்சி என்பது சாத்தியமல்ல.
எனவே, தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்படுவதுடன், ஊழல் குற்றத்தை செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழு 9–12–2017 அன்று (இன்று) காலை 10.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முறையிட உள்ளது. அப்போது புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவும் கவர்னரிடம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.