ஒகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த தமிழக மீனவர்களை அழைத்து வர ஏற்பாடு

ஒகி புயலில் சிக்கி பல்வேறு மாநிலங்களில் கரை சேர்ந்த தமிழக மீனவர்களை அழைத்து வர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2017-12-07 00:15 GMT
சென்னை,

‘ஒகி’ புயல் காரணமாக தமிழக, கேரள மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமானார்கள்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன எஞ்சியுள்ள மீனவர்களை கண்டறிந்து மீட்பது பற்றி கடற்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மீன்பிடிக்கச் சென்று ஒகி புயலினால் கரை திரும்ப முடியாமல் உள்ள மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என்பது மாவட்ட நிர்வாகம் செய்து வருகிற கணக்கெடுப்பின்போது மீனவர்களின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எரி எண்ணையும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணையும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் சிறப்பினமாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், மீனவர்களை அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டுவந்து சேர்க்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாக்டர் சந்தோஷ் பாபுவை கர்நாடகா மாநிலத்திற்கும், ஷம்பு கல்லோலிகரை மராட்டிய மாநிலத்துக்கும், சந்திரகாந்த் பி.காம்ளேயை குஜராத்துக்கும், அருண் ராயை கேரள மாநிலத்திற்கும், ஏ.ஜான் லூயிசை லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்பும்படி முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்