சாலை விபத்துகளை குறைக்க வாகன சட்ட விதிகளை பின்பற்ற தமிழக அரசு வலியுறுத்தல்
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016–ம் ஆண்டு 17,218 நபர்களும், 2017–ம் ஆண்டு (அக்டோபர் மாதம் முடிய) 14,077 நபர்களும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில் 90 சதவீத சாலை விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுனர்களால் மற்றும் அதனால் ஏற்படும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுகிறது என தெரிய வருகிறது.
தமிழகத்தில் ஏற்படக்கூடிய சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சிகேப் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுனர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுனர்களை ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக்கூடாது. ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும்.
அரசின் வாகனங்களின் சட்டவிதிகளை மீறும் டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சிகேப் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதி சீட்டு மற்றும் தகுதிசான்றுகள் போக்குவரத்துத்துறையினரால் புதுப்பிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் பொருட்டு மேற்கூறிய சட்டவிதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.