“மீனவர்களின் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

“ஒகி புயல் தாக்கியதில் கடலில் காணாமல் போன மீனவர்களின் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2017-12-05 22:30 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்கள் அதிருப்தி

இந்தியாவின் முனை என்று அழைக்கப்படும், ‘ஒகி’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடியப் பிறகும், காணாமல் போயிருக்கும் மீனவர்கள் பிரச்சினை மிக தீவிரமானதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது என்பதையும், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதையும் தங்களது கவனத்துக்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை கையாளும் திறனை மாநில அரசு இழந்துவிட்டது என்பது மீனவ மக்களிடம் நான் மேற்கொண்ட முதற்கட்ட உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது.

மீனவர்கள் காணாமல் போயுள்ள விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் சார்பில் வெளியாகும் முரண்பட்ட, தவறான, மாறுபாடான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளும், பேட்டிகளும் இந்த அரசின் நிர்வாகத் தோல்வியை எடுத்துக்காட்டும் வாக்குமூலமாக அமைந்திருக்கிறது.

அதிர்ச்சி தகவல்

இதுவரை வெளியான அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் எல்லாவற்றையும் திகிலடைய வைக்கும் விதத்தில் தமிழக முதல்-அமைச்சரோ தன் பங்குக்கு, தன்னுடைய அரசை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரின் அறிக்கைகளையே நேற்றைய தினம் மறுக்கும் விதத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

2,570 மீனவர்கள் கடலில் தவித்ததாகவும், அவர்களில் 2,384 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்ததோடு மட்டுமின்றி , நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப் பிறகும்கூட, 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களை இன்னும் காணவில்லை என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 74 மீனவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டும் என்றும் அதிர்ச்சிகரமான தகவலைவெளியிட்டு, காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை 260-ஆக அறிவித்திருக்கிறார்.

“காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர்?” என்பது குறித்து மாநில அமைச்சரவைக்குள்ளேயே இவ்வளவு குழப்பங்கள் நீடிக்கும்போது, “ஆயிரம் மீனவர்கள் காணமல் போயுள்ளார்கள் என்ற தகவல் முற்றிலும் தவறானது” என்ற தங்களின் பேட்டியை தொலைக்காட்சிகளில் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

ஏமாற்றம் அளிக்கிறது

காணாமல் போயிருக்கும் தங்கள் குடும்பத் தலைவர்களை, சொந்தங்களை காண தவித்துக் கொண்டிருக்கும் மீனவச் சமுதாய மக்கள், தங்கள் பேட்டி, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் விதத்தில் அமைந்து விட்டதாக கருதுகின்றனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துவிட்ட இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி சேதப்படுத்தி 6 நாட்களாகியும், மத்திய மாநில அரசுகள், காணமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை இதுவரை தோராயமாகவே வெளியிட்டு வருகின்றனவே தவிர, முதல்-அமைச்சர் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய பிறகும் காணாமல் போனவர்கள் குறித்த உண்மையான அல்லது நம்பக்கூடிய தகவல்கள் வெளிவரவில்லை என்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

உடனடியாக நடவடிக்கை

“1000 மீனவர்களுக்கு மேல் காணவில்லை” என்ற மீனவச் சமுதாய தாய்மார்கள் கண்ணீரும் கம்பலையுமாக கதறுவதை புறக்கணித்துவிட முடியாது என்பதை கவனத்தில் கொண்டு, காணாமல் போன மீனவர்கள் குறித்த சரியான எண்ணிக்கையை கண்டறிய தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாதுகாப்புத் துறை மந்திரி என்ற முறையில் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடித்து, அவர்களின் உயிரை காப்பாற்றும் அனைத்து வாய்ப்புகளும் தங்களுக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். மேலும், நமது கடற்படைக்கும் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் அனைத்து பயனுள்ள வழிமுறைகளும் இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இந்த விவகாரத்தில் மேலும் தாமதித்தால், ஏற்கனவே இன்னல் சூழ்ந்துள்ள மீனவச் சமுதாயத்தினரின் துயரத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதால், காணாமல் போன மீனவர்களின் விவகாரத்தில் அடங்கியுள்ள மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

இறுதியாக, கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள ஒகி புயல் பாதிப்பினை, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க தாங்கள் முயற்சிக்க வேண்டும் எனவும், தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி புயலால் சிதைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் முகத்தை மறுசீரமைக்கவும், பேரழிவுக்குள்ளாகியுள்ள உட்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியை மாநில அரசுக்கு பெற்றுத் தந்திட தாங்கள் உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்