அரசு மருத்துவர் பாலாஜிக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’ நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருடைய கைரேகை பதிவு செய்த அரசு மருத்துவர் பாலாஜிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன் மற்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவக்கல்வி இயக்குனராக இருந்த விமலா, ஜெயலலிதா மரணம் அடைந்த போது மருத்துவக்கல்வி இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
மயக்கவியல் துறை பேராசிரியை
இந்தநிலையில் சென்னை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துசெல்வன் ஆகியோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி அவர்கள் இருவரும் நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகினர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் குறித்து மருந்தியல் துறை உதவி பேராசிரியரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பினார்.
அவர்கள் இருவரிடமும் 3½ மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
ஜெ.தீபாவின் கணவர் மாதவன், அரசு மருத்துவர் டிட்டோ ஆகியோர் இன்று (புதன்கிழமை) விசாரணை ஆணையத்தில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
மருத்துவர் பாலாஜிக்கு சம்மன்
மேலும் அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோர் நாளை(வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் தனது முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். அதன் அடிப்படையில் அரசு மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
கைரேகை குறித்து விசாரணை
ஏற்கனவே ஆணையத்தில் ஆஜரான டாக்டர்.சரவணன், ஜெயலலிதாவின் கைரேகை அவர் இறந்த பிறகே பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ஆணையத்தில் வைத்துள்ளார். இதுகுறித்தும் மருத்துவர் பாலாஜியிடம் ஆணையம் விசாரணை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ டாக்டர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதிலும் அரசு தரப்பிலும் மருத்துவக்குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இந்தக்குழுவில் பேராசிரியை கலா, பேராசிரியர் முத்துசெல்வன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இதைதொடர்ந்து தான் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.