ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி- பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை
ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பரில் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ந்தேதி அவர் மரணமடைந்து விட்டார்.
இந்த நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலிருந்து சேப்பாக்கம் வழியாக மெரினா வரை பேரணி நடை பெற்றது. பேரணியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
பேரணி முடிவில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அ.தி.முக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏரளாமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.