குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்கக் கோரி மு.க.ஸ்டாலினிடம் கதறிய பெண்கள்

குமரி கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து பெண்கள் கதறினர்.;

Update: 2017-12-04 23:15 GMT
நாகர்கோவில்,

‘ஒகி’ புயலின் கோர தாண்டவத்தால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று குமரி மாவட்டத்தில் புயல்-மழையால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.

உருக்கமான வேண்டுகோள்

மீனவ கிராமமான நீரோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் கடலில் மாயமாகி உள்ளனர். அந்த மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பரிதவிப்பில் உள்ளனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி நீரோடியில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அந்த கிராமத்துக்கு சென்ற ஸ்டாலின், மீனவ மக்களை சந்தித்தார். சோகம் தாங்காமல் அவரின் கைகளை பற்றி பெண்கள் கதறி அழுதனர். மாயமானவர்களை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

அங்கு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பெரும் இழப்பு

‘ஒகி’ புயல் தொடர்பாக வானிலை மையம் முன்கூட்டியே தெரிவித்த எச்சரிக்கை தகவலை தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் உங்களுக்கு முறையாக தந்திருக்க வேண்டும். அந்த தகவலை அரசு முன்கூட்டியே தராத காரணத்தால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் வந்து இருக்கிறார்கள். நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இப்போது எடுத்துள்ள இந்த அக்கறையை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த நேரத்திலேயே எடுத்திருந்தால், இந்த நிலை நிச்சயமாக ஏற்பட்டு இருக்காது.

உங்களுடன் இருப்போம்

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் என்ன பணிகளை செய்ய வேண்டுமோ, அதை விட அதிகமான அளவில் பணிகளை நிச்சயமாக ஆற்றுவேன் என்ற உறுதியை, நம்பிக்கையை உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். மாநில அரசையும், மத்திய அரசையும் நானும் தொடர்பு கொண்டு இந்த பணிகளை வேகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்.

உங்களது உணர்வுகளை நாங்கள் சுமந்து கொண்டு இருக்கிறோம். எந்தநிலையிலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

விவசாயிகளுக்கு ஆறுதல்

பின்னர் மு.க.ஸ்டாலின் இலவுவிளையில் புயலால் முறிந்து விழுந்த ரப்பர் மரங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். விவசாயிகள் பலர் அவரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

மணவாளக்குறிச்சியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

படகில் சென்று ஆய்வு

முன்னதாக முட்டம் பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்துக்கு வந்த அவரை மீனவர்கள், பங்கு தந்தைகள் வரவேற்று மீன்பிடி விசைப்படகு மூலம் அவரை கடலுக்குள் அழைத்து சென்றனர். கடலில் அமைக்கப்பட்டு இருந்த தூண்டில் வளைவு, புயலால் சேதம் அடைந்து இருப்பதை பார்வையிட்டார்.

சேத விவரங்களை மீனவர் கள் விளக்கி கூறினர். தூண்டில் வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டனர். மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை விசைப்படகில் இருந்தவாறே மு.க. ஸ்டாலின் சேதங்களை பார்வையிட்டார். பின்னர் கரைக்கு வந்த அவர் மற்ற இடங்களுக்கு சென்று ஆய்வுப்பணியை தொடர்ந்தார்.

மு.க.ஸ்டாலின் பேட்டி

நாகர்கோவில் அருகே அனந்தன் நாடார்குடி பகுதியில் புயலால் சேதம் அடைந்த வாழைகளையும், விவசாய பயிர்களையும் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாயமான மீனவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 500, 1,000 என்று சொல்லக்கூடிய அளவில் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் முறையாக கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை. மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறார்களா? என்று பார்த்தாலும் இல்லை.

புயல் மழையால் உயிரிழந்து இருக்கக் கூடிய 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் என்பதை தாண்டி வேறு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அருகில் உள்ள கேரளாவில் புயல் மழைக்கு ஏற்பட்டு இருக் கின்ற உயிரிழப்புக்கு அந்த மாநில அரசு தலா ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கி இருக்கிறது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்தபோது மீனவ கிராமங்களுக்கு சென்று சேதங்களை ஆய்வு செய்யாதது ஏன்? அவர் போனால் மீனவ மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் செல்லவில்லை. கேரள மாநில முதல்-அமைச்சர் கேரள மாநிலத்தையே பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரி மாவட்டத்தை அறிவித்தால் தான் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு மூலமாக பெற்று பாதிப்புகளை சரிசெய்ய முடியும்.

தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்க மாட்டார்கள். ஏன் என்றால் மத்திய அரசிடம் அவர்கள் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால் மத்திய அரசிடம் எதையும் வாதாடி பெற மாட்டார்கள். குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசிடம் நாங்கள் நிச்சயமாக வலியுறுத்துவோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 

மேலும் செய்திகள்