முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு: ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த ஓராண்டுகளாக அ.தி.மு.க. பல்வேறு நிலைகளில் கரடு, முரடான பாதைகளை கடந்து வந்திருக்கிறது.

Update: 2017-12-04 23:00 GMT
இந்திய அரசியலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்த பெண் முதல்-அமைச்சர்கள் வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர், ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். உருவாக்கிக் கொடுத்த அ.தி.மு.க.வை ராணுவ கட்டுப்பாட்டோடு அவர் வழிநடத்தினார்.

எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தபோது, தனி ஒருவராக சட்டசபைக்கு சென்று, சிங்கம் என கர்ஜித்து தனது கருத்துகளை பதிவு செய்தவர், ஜெயலலிதா.

தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் கோலோச்சிய அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலனளிக்காமல், இதே நாளில் (டிசம்பர் 5-ந் தேதி) மரணம் அடைந்தார். அ.தி.மு.க. தொண்டர்களை மீளாத்துயரில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் மறைவு, தமிழக அரசியலையும் ஆட்டம் காணச் செய்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த ஓராண்டில் அ.தி.மு.க.வில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

டிசம்பர் 5:- ஜெயலலிதா மரணம் அடைந்த அன்றைய தினம் இரவே முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

டிசம்பர் 29:- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு.

பிப்ரவரி 5:- சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி 7:- ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் மேற்கொண்டார். சசிகலா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் வைத்த அவர், தனித்து செயல்படப்போவதாகவும் அறிவித்தார்.

பிப்ரவரி 10:- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவாமல் இருக்க 122 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பிப்ரவரி 14:- சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்பட 19 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பிப்ரவரி 15:- பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். முன்னதாக, அன்றைய தினம் காலை ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்து, சபதம் ஏற்றுச் சென்றார்.

பிப்ரவரி 16:- தமிழகத்தின் புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.

மார்ச் 8:- ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி, அ.தி.மு.க. அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மார்ச் 23:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. அம்மா அணிக்கு தொப்பி சின்னமும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா (ஓ.பன்னீர்செல்வம்) அணிக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.

ஏப்ரல் 9:- பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

ஏப்ரல் 25:- இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்டு 10:- அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம்-எடப் பாடி பழனிசாமி அணிகள் இணைந்தன.

செப்டம்பர் 18:- டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.

நவம்பர் 9:- சசிகலா உறவினர்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

நவம்பர் 23:- எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிதான் உண்மையான அ.தி.மு.க. என்றும், அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் என்றும் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

நவம்பர் 24:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இம்மாதம் (டிசம்பர்) 21-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நவம்பர் 30:- ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வேட்பாளராக இ.மதுசூதனன் அறிவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்