புயல் தாக்கினாலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்

புயல் தாக்கினாலும் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-12-04 19:32 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கும், சுமத்திரா தீவுகளுக்கும் இடையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும், அப்புயலுக்கு சாகர் என்று பெயரிடப்படவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களையும், ஆந்திராவின் தென் பகுதிகளையும் தாக்கக்கூடும் எனத் தெரிகிறது.

வந்த பின்னர் வருத்தப்படுவதை தவிர்த்து முன்னதாகவே புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

புயல் தாக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முன்கூட்டியே அனுப்பி சேதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை புயல் தாக்கினாலும் அதனால் பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்