ஜனநாயகத்துக்கு உட்பட்ட யுக்திகளை தி.மு.க. செயல்படுத்தும் கனிமொழி எம்.பி. பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்காக ஜனநாயகத்துக்கு உட்பட்ட யுக்திகளை தி.மு.க. செயல்படுத்தும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Update: 2017-12-03 23:15 GMT

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் தி.மு.க. தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பணிமனையில் நேற்று தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வெளியே வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– நிச்சயமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று தான் பார்க்கிறேன். அது உங்களுக்கே தெரியும். தி.மு.க.வுக்கு தான் வெற்றி என்பது தெளிவாக தெரிந்த வி‌ஷயம்.

கேள்வி:– இந்த தேர்தல் வெற்றிக்காக என்ன மாதிரியான யுக்திகளை கையாளப்போகிறீர்கள்?

பதில்:– ஜனநாயகத்துக்கு உட்பட்ட அனைத்து யுக்திகளையும் தி.மு.க. செயல்படுத்தும். மக்களுக்கு, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நியாயங்களுக்கு விரோதமாக எதையும் தி.மு.க. செய்யாது.

கேள்வி:– தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:– இனிமேல் தான் அது தெரியும். நியாயமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மற்றவர்கள் செய்ய நினைக்கும் தவறுகளை எல்லாம் தடுத்து நிறுத்தி சரியான முறையில் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.

கேள்வி:– கடந்த முறை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:– தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அவர்கள் தான் போட்டியிடுகிறார்கள். அதே தவறு மீண்டும் நடைபெற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதை தடுக்க வேண்டும். தவறு செய்பவர்களை மீண்டும் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்