திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

கர்ப்பிணியாக இருந்த பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைதான காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2017-11-25 21:30 GMT
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரிச்சாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் வஜ்ரம். இவருடைய மகள் லட்சுமி (வயது 14). இவள் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு புறப்பட்டு சென்ற லட்சுமி முள்ளனூர் ஆற்றின் கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள்.

இதுகுறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி லட்சுமி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், மாணவியுடன் பழகிய அதே ஊரைச் சேர்ந்த பிரதாப் (வயது 27) என்பவர்தான் லட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-

கல் உடைக்கும் தொழிலாளியான பிரதாப், மாணவி லட்சுமியின் தூரத்து உறவினர். பிரதாப் காதலிப்பதாக கூறியதால் அதனை நம்பி லட்சுமி அவருடன் நெருங்கி பழகினாள். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பிரதாப் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் லட்சுமி கர்ப்பமடைந்தாள். இதையடுத்து அவள் தான் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக பிரதாப்பிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்ய கூறினாள்.

இதனால் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பிரதாப் பள்ளிக்கு சென்ற லட்சுமியிடம் நைசாக பேசி அவளை முள்ளனூரில் உள்ள ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிரதாப் அவரது உடலை அங்குள்ள பாலத்தின் கீழ் போட்டு விட்டு சென்று விட்டார்.

இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து பிரதாப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்