தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

மாணவர்கள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

Update: 2017-11-23 23:30 GMT
சென்னை,

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் வரவேற்று பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப புலம், அறிவியல், உடல்நிலை அறிவியல் ஆகிய துறைகளில் 6 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டயங்கள், இளநிலை பட்டம், முதுநிலை பட்டம், ஆராய்ச்சி பட்டம் ஆகியவற்றை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

கல்விக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்துதரப்பினரும் உயர்கல்வியை பெறவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள் 45 சதவீதம். பொதுவாகவே இந்தியாவில் அன்று முதல் இன்று வரை பெண்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள். பெண்கள் கல்வி பயின்றால் அவர்கள் அதிகாரம் பெறுவார்கள். நாட்டின் பல்வேறு பொறுப்புகளில் இருப்பார்கள். இந்தியாவில் தான் 35 வயதுக்கு குறைவாக உள்ள இளைஞர்கள் அதிகம். இந்தநிலை எந்த நாட்டிலும் கிடையாது. நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு செல்லும் நிலையில் உள்ளோம்.

நினைவாற்றலை அடிப்படையாக கொண்ட தேர்வு முறையில் ஏதாவது அர்த்தம் உள்ளதா? அந்த தேர்வு முறையை ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. கல்வித்துறையில் துணைவேந்தர்கள், கல்வி நிபுணர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பாடத்திட்டம் எப்படி கொண்டு வரலாம் என்று கருத்து கூறலாம்.

அனைவரும் தாய்மொழியை நன்றாக படியுங்கள். அதன் பிறகு எந்த மொழி தேவையோ அதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்பின் போது நான் மாணவராக இருந்தேன். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இந்தியா முழுவதும் பணியாற்ற விரும்பினால் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள். உலக நாடுகளில் பணியாற்ற விரும்பினால் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளுங்கள். எந்த மொழியையும் கற்கலாம்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

கவர்னர் பன்வாரிலால்

கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “உலகில் உயர் கல்வியில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. உயர் கல்வியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது, உயர் கல்வி நிறுவனங்களும் நிறைய உள்ளன. பல்கலைக்கழகம் என்பது அறிவு சேர்க்கும் மையமாக மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிலும் சிறந்து விளங்கவேண்டும். கல்விதரத்தை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தலைவர் பி.சத்யநாராயணன், பதிவாளர் பேராசிரியர் சேதுராமன், இல.கணேசன் எம்.பி., உயர்கல்வி மாமன்ற முன்னாள் செய லாளர் பேராசிரியர் கரு. நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்ட னர். இணை துணை வேந்தர் டி.பி.கணே சன் அறிக்கை படித்தார்

மேலும் செய்திகள்