தேர்தல் ஆணையம் நடுநிலையோடும், சுதந்திரமாகவும் செயல்படவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் நடுநிலையோடும், சுதந்திரமாகவும் செயல்படவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்,
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்,ஈபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் நடுநிலையோடும், சுதந்திரமாகவும் செயல்படவில்லை. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர், குஜராத் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். சாதிக் அலி வழக்கு, அ.தி.மு.க.,விற்கு பொருந்தாது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேர்தல் ஆணையம், மத்திய அரசின் விருப்பத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறது என்பது நிருபணமாகி உள்ளது.
இதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. 99 சதவீத தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். தற்போது இரட்டை இலை சின்னம், குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக உள்ளது. அதை மீட்போம். தேர்தல் ஆணையம் தீர்ப்பு மூலம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது நிருபணமாகி உள்ளது. அவரது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் தான் மீண்டும் போட்டியிடுவேன்” என்றார்.