சொத்துகளுக்காக ஜெயலலிதாவை கொலை செய்தார்களா? ஜெ.தீபா மனு

ஜெயலலிதாவை கொலை செய்தார்களா? உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெ.தீபா விசாரணை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2017-11-22 22:15 GMT
சென்னை,

சொத்துகளுக்காக எனது அத்தை ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், கடுமையாக தாக்கப்பட்ட பின்னரே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் கூறி அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெ.தீபா விசாரணை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று மாலை தனது வக்கீல் தொண்டன் சுப்பிரமணியுடன் விசாரணை ஆணையத்துக்கு வந்தார். அவர், ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் புகார் மனுவை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சராக இருந்த எனது அத்தை ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நானும், எனது தம்பி தீபக்கும் தான் உண்மையான வாரிசுகள். ஆனால் சசிகலா எங்கள் அத்தையை நாங்கள் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டார். இந்த நிலையில் எனது அத்தை ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

போயஸ் கார்டனில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவில் ஆம்புலன்சு மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்ட செய்தியை யாரும் எங்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது அத்தையை சந்திக்க சென்ற என்னையும் அங்கிருந்தோர் அனுமதிக்கவில்லை.

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்னை பலமுறை தொடர்புகொண்டு, எனது அத்தை என்னை சந்திக்க விருப்பமாக இருப்பதாக கூறினார். ஆனால் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் என்னை அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அவர்களது நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தன.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஒருவரின் உடல்நிலை குறித்து அவரது ரத்த சொந்தங்களிடம் தெரிவிப்பது ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் அவரை சந்திக்கக்கூட என்னை விடவில்லை. எந்த தகவலும் என்னிடம் தெரிவிக்கப்படவும் இல்லை. என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் புரியவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி எனது அத்தை கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, அதன்பின்னரே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவே நம்புகிறேன். இந்த விவகாரத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எனது அத்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன? என்பதை மூடி மறைத்துவிட்டனர். இந்த நாடகம் ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியாமல் நடத்தப்பட்டு இருக்கிறது. எனது அத்தை மரணத்தில் ஒளிந்துள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவருவதற்காக நான் எடுத்த எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டன.

போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள பணியாளர் ராஜம்மா என்பவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள பல விஷயங்களை தெரிவிக்காமல் மூடி மறைத்து வருகிறார்.

ஜெயலலிதாவின் சொத்துகள் தங்கள் கையை விட்டு நழுவிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு தடவையும் எனது அத்தையை ஆஸ்பத்திரியில் பார்க்க வரும்போதும், சசிகலா குடும்பத்தினரால் நான் தடுக்கப்பட்டேன். எனவே, அனைத்து சம்பவங்களையும் பார்க்கும்போது எனது அத்தை சொத்துகளுக் காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றே சந்தேகம் வலுக்கிறது.

எனது அத்தை ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது உதவியாளர் பூங்குன்றன், பணியாளர் ராஜம்மா, ஆம்புலன்சு டிரைவர், அவருக்கு பணிபுரிந்த நர்சுகள், அமைச்சர்கள், எனது அத்தை உணவு சாப்பிட்டதாக கூறிய டாக்டர்கள் மற்றும் சசிகலா, இளவரசி, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அனை வரும் விசாரிக் கப்பட வேண்டும். இதன்மூலம் நியாயம் கிடைக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்