ஆள் இல்லா விமானம் மூலம் சென்னை வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்

முதல்முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் சென்னை வரைபடம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2017-11-21 22:00 GMT
சென்னை,

முதல்முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் சென்னை வரைபடம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த பணியை தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி பகுதியில் முதல்முறையாக ஆள் இல்லா விமானம் மூலம் அரசு சொத்துகள், சாலைகள் கட்டிடங்களை கணக்கெடுத்து புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.

அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்த பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியாவிலேயே நான்காவது பெரிய உள்ளாட்சி அமைப்பான பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 75 லட்சம் மக்கள் தொகையும் கொண்டது. உலக வங்கியின் ரூ.6.43 கோடி நிதி உதவியுடன் 2 ஆள் இல்லா விமானம் மூலம் அனைத்து கட்டிடங்கள், சாலைகள் மற்றும் அரசு சொத்துகள், சேவை பயன்பாட்டு பொருட்களை புவிசார் தகவல் அமைப்பு (ஜி.ஐ.எஸ்.) உதவியுடன் வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை, உள்துறை, பாதுகாப்பு துறை, புலனாய்வு துறை மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட கலெக் டர்கள், மாநகர போலீசாரின் அனுமதி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

வரைபடம் தயாரிக்கும் பணியை 120 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து சொத்துகள் மற்றும் சாலைகளின் மேல் அமைந்துள்ள அரசு, சேவை நிறுவனங்கள், துறைகளின் பயன்பாட்டு பொருட்களை ஒருங்கிணைத்து புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக் கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தை திட்ட மேலாண்மை அமைப்பாக நியமித்து உள்ளது.

ஆள் இல்லா விமானம் மூலம் தயாரிக்கப்பட உள்ள புவிசார் தகவல் வரைபடத்துடன் மாநகராட்சியின் மேலாண்மை தகவல் புள்ளி விவரங்கள் இணைக்கப்படும். தகவல்களை பாதுகாப்பாக கையாள மாநகராட்சி தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆள் இல்லா விமானம் மூலம் தயாரிக்கப்படும் வரைபடம் மூலம் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் மழைநீர் வடிகால்வாய்களை மேம்படுத்த இயலும். மேலும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் இது உதவியாக இருக் கும்.

சொத்துகளுக்கான புவியியல் தகவல் முறையை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பிற அரசு துறைகள் வழங்கும் சேவைகளின் தரம் உயர்த்தப்படும். சொத்துகள் மற்றும் சேவை பயன்பாட்டு பொருட்கள் பற்றிய தெளிவான, துல்லியமான காட்சிகளை புவியியல் தகவல் முறையில் பெறலாம். உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செலவிடப்படும் செலவு முறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்