புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் வெளியிடப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பிப்ரவரியில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-
ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்ட வரைவு வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை ஒரு தொகுப்பாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மற்றொரு தொகுப்பாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த வரைவு பாடத்திட்டத்தை 4 மாத காலத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது இந்தியாவே வியக்கத்தக்க வகையில், தமிழக வரலாற்றில் முக்கிய அம்சமாகும்.
இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு ஆண்டாக கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன. அதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் போன்ற பலர் பங்கேற்று கருத்துகளை கூறினர். அந்த வகையில் சுமார் 2 ஆயிரம் பேர் கருத்துகளை வழங்கினர். பின்னர் 5 மையங்களாக உருவாக்கப்பட்டு மதுரை, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இந்த குழு நேரடியாக சென்று கருத்துகளைப் பெற்றது.
பிப்ரவரியில் வெளியீடு
அதன் பின்னர் அவற்றின் அடிப்படையில் 4 மாதங்களில் இந்த வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இது தேச வரலாற்றில் முதல் முறையாகும். அனைத்து துறைகளிலும் மாணவர்களை உருவாக்குவதற்கும், பிளஸ்-2 முடிக்கும் போதே அவர் களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதற்கும், எதிர்காலத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதற்குமான கல்வியை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்பட சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள், மாணவர்கள் அனைவரும் இந்த வரைவு பாடத்திட்டம் தொடர்பாக தங்கள் கருத்துகளை 7 நாட்கள் தெரிவிக்கலாம். இதில் எந்தெந்த கருத்தை ஏற்கலாம் என்பதற்கான சிறிய குழு உருவாக்கி ஆய்வு செய்யப்படும். பின்பு அதை புத்தக வடிவாக்கம் செய்வோம். பிப்ரவரியில் பாடநூல் நிறுவனம் மூலம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும். அடுத்த ஆண்டில் 1, 2, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு மாற்றி அமைக்கப்படும். 2 ஆண்டுகளில் இது நடவடிக்கைகளை முடித்துவிடுவோம்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
1, 2, 6, 9, 11 ஆகிய வகுப்புகளை இந்த ஆண்டு எடுத்துக்கொள்கிறோம். அடுத்த ஆண்டில் முழுமையான அனைத்து வகுப்புகளும் எடுத்துக்கொள்ளப்படும். புதிய மாற்றத்தின்படி, கற்கும் கல்வியை உடனே புரிந்துகொள்ளும் வகையிலும், மறக்காமல் இருக்கும் வகையிலும் கல்வி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவே வியக்கத்தக்க வகையிலான மாற்றம். சிறந்த கருத்துகளாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும்.
நீட் உள்பட எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு புதிய கல்வித்திட்டம் இருக்கும். மேல்நாட்டு கல்வி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து, தேச அளவில் கல்வி திட்டத்தில் எப்படி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொண்டு மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு கையேடு மற்றும் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.