ஒரு தாயாக சோனியாகாந்தி எனது உணர்வுகளை புரிந்து கொள்வார் பேரறிவாளன் தாயார் பேட்டி

ஒரு தாயாக சோனியாகாந்திக்கு தனது உணர்வுகள் புரியும் என்றும், தன் மகனின் விடுதலைக்கு உதவ வேண்டும் என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

Update: 2017-11-17 00:00 GMT

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சமீபத்தில் பேரறிவாளனுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்திக்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனையை உறுதி செய்த 3 நீதிபதிகளில் ஒருவரான தாமஸ் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர், 1991–ம் ஆண்டு முதல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பேரறிவாளனின் வழக்கை தயவு கூர்ந்து கருணையோடு பரிசீலித்து அவரது விடுதலைக்கு வழி வகுக்கவேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

முன்னாள் நீதிபதியின் கடிதத்தை தொடர்ந்து பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்துள்ளது. இதற்கிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

என் மகன் 27 ஆண்டுகளாக சிறையிலேயே தன்னுடைய வாழ்வின் முக்கியமான காலக்கட்டத்தை கழித்து விட்டான். என் மகனின் விடுதலைக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா என் மகன் விடுதலைக்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். என் மகன் அனுபவித்த கஷ்டங்கள் போதும். அவனை விடுதலை செய்ய தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

விசாரணை அதிகாரி தியாகராஜன் உண்மையை கூறியபோதே என் மகன் வெளியே வந்துவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம் என் மகன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

முன்பு ஒரு முறை சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி சென்றிருந்தேன். ஆனால் அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. இப்போது அவரை சந்திக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நீதிபதியே அவருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

ஒரு தாயாக சோனியாகாந்திக்கு எனது உணர்வுகள் புரியும் என்று நினைக்கிறேன். அவர் என் மகனின் விடுதலைக்கு உதவ வேண்டும். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தமிழ்நாடு வாழ்வாழ் சிறை மன்றத்தின் நிர்வாகி தியாகு உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்