‘விவசாயிகள் 30–ந் தேதிக்குள் காப்பீடு பிரீமியம் செலுத்த வேண்டும்’ வேளாண் உற்பத்தி ஆணையர் தகவல்

வறட்சி, வெள்ளப்பெருக்கு சேத இழப்பீடு பெற விவசாயிகள் வருகிற 30–ந் தேதிக்குள் காப்பீடு பிரீமியம் செலுத்தவேண்டும் என்று தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பெடி கூறினார்.

Update: 2017-11-15 22:07 GMT

சென்னை,

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் களவிளம்பரத்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் சார்பில் வேளாண் உற்பத்தி தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்று நடந்தது. தென்மண்டல பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் ஜெனரல் கே.முத்துக்குமார் தலைமை தாங்கினார்.

களவிளம்பர இயக்குனரகம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘வேளாண்மை’ தொடர்பியலாளருக்கான கையேட்டை தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பெடி வெளியிட, சென்னை களவிளம்பரத்துறை இயக்குனர் எம்.அண்ணாதுரை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ககன்தீப் சிங் பெடி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் வறட்சி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரத்து 247 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சி போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் 7 முதல் 8 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் புதிய காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக கடந்த ஆண்டு 15.37 லட்சம் விவசாயிகள் 31.85 லட்சம் ஏக்கர் நிலங்களை காப்பீடு செய்தனர்.

சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வருகிற 30–ந் தேதிக்குள் காப்பீடு திட்டத்தில் இணைந்து அதற்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், வறட்சி, வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீடு பெற முடியாது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ–நாம்) வேலூர் மாவட்டம் அம்மூரில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அன்னூர், அந்தியூர், கம்பம், திண்டுக்கல், கோபி, பரமக்குடி, சத்தியமங்கலம், திருக்கோவிலூர், திருப்பூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 15 இடங்களில் தலா ரூ.30 லட்சம் செலவில் புதிய மின்னணு சந்தைகள் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளின் விளைபொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும். இதன் மூலம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பயிலரங்கத்தில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநில தலைவர் டாக்டர் கே.பி.அருச்சுணன் மூலிகை செடிகள் கண்காட்சி அமைத்து, அதன் மூலம் களவிளம்பர துறையினருக்கு விளக்கம் அளித்தார். முன்னதாக களவிளம்பர துறை உதவி இயக்குனர் (புதுச்சேரி) டாக்டர் டி.சிவக்குமார் வரவேற்றார். உதவி இயக்குனர் (கோவை) ஹரிநாம் தெங்கமம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்