தமிழகத்தில் 100 இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா மற்றும் கையேடு வெளியீட்டு விழா சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

Update: 2017-11-14 00:00 GMT

சென்னை,

பயிற்சி வகுப்புகளை தொடக்கியும், கையேட்டை வெளியிட்டும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:–

மாணவர்களின் அறிவுத்திறனை மேலும் மெருகூட்டி, அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் விதத்தில் இந்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து அதற்கான நூல்களை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

தகுதி நுழைவு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல் உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையும், ‘ஸ்பீடு’ அறக்கட்டளையும் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது இன்று செயல் வடிவம் பெறுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர். இதுவரை இப்பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டமானது இவ்வாண்டு 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி மையத்தை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன.

இன்றைய தினத்தில் முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணத்தையும் பெறாமல் 12–ம் வகுப்புக்கு பின் தொழில்சார் பட்டப்படிப்புகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் பாடப்பொருளை எளிதாக பரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் பயிற்று மொழியிலேயே மிகச்சிறந்த பாட வல்லுனர்களைக் கொண்டு இப்பாடங்கள் நடத்தப்படும்.

இதற்கான பாடப்பகுதிகளுடன் மாணவர்களுக்கு 30 பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையாதபடி, மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொதுத்தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கொள்குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) வினாக்களும் மற்றும் அதன் பாடப்பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு பொதுத்தேர்வுக்கும், மாணவர்கள் கடினமாக நினைத்துக்கொண்டிருக்கும் போட்டித்தேர்வுகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என எண்ணிப் பார்த்தபோது, எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் அனைத்து கலைகளையும் கற்றுத் தரும் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றி கேள்விப்பட்ட மூன்று மாணவர்கள், அவரிடம் சீடர்களாக சேர வந்தனர். நாளைக்கு வாருங்கள் என்று அவர்களை குரு அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் தனது மனைவியிடம், நாளைக்கு வரும் அந்த மாணவர்களிடம், ‘‘நேற்று இரவு குரு உறங்கி கொண்டிருந்தபோது அவரது காதில் ஓணான் ஒன்று புகுந்து கடித்தால், குரு இறந்துவிட்டார்’’ என்று கூறவேண்டும் என்று சொன்னார்.

இதை முதலாவதாக வந்த மாணவனிடம் குருவின் மனைவி கூறினார். உடனே அந்த மாணவன், ‘‘ஓ! அப்படியா, அவரது ஜாதகப்படி இம்மாதத்தில் அவருக்கு ஒரு கண்டம் இருந்தது. அதனால்தான் அவர் இறந்துவிட்டார்’’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான்.

பின்னர் வந்த இரண்டாம் மாணவனிடமும் குருவின் மனைவி அதையே கூறினார். அதற்கு அவன், ‘‘ஓ! குரு இறந்துவிட்டாரா, அவரிடம் கல்வி கற்க ஆவலுடன் இருந்தேன். சரி, வேறு ஒரு குருவைத்தேடி அவரிடம் கல்வி கற்றுக்கொள்கிறேன்’’, என்று கூறி திரும்பிச்சென்று விடுகிறான்.

மூன்றாம் மாணவனிடமும், அதே செய்தியை குருவின் மனைவி சொன்னபோது, அம்மாணவன் சற்று யோசித்தான். ‘‘மன்னிக்கவும், தாங்கள் பொய் சொல்வதாக நினைக்கிறேன். குரு இறப்பதற்கான வாய்ப்பில்லை’’ என்று கூறுகிறான். மறைவிலிருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த குரு, ‘‘ஆகா, நீயே சரியான மாணவன். உன்னை நான் என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றார்.

குருவின் மனைவி ஆச்சரியத்துடன், அம்மாணவனைப் பார்த்து ‘‘குரு இறக்கவில்லை என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்?’’ எனக்கேட்டார்.

அதற்கு அந்த மாணவன், ‘‘கணவர் இறந்த துக்கம் உங்கள் முகத்தில் இல்லை. மேலும், ஒரு மனிதனின் காதில் ஓணான் நுழைய முடியாது. நுழைந்து கடித்தாலும் இறக்க நேராது. எனவே குரு இறக்கவில்லை என்று நான் உறுதியாகக் கூறினேன்’’ என்றான்.

இக்கதையில் வரும் முதல் மாணவன் தன் மதியை நம்பாமல், விதியை நம்பி சென்றுவிடுகிறான். இரண்டாம் மாணவன், தான் கேட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அறியாமல், குருவின் மனைவி சொன்னதே உண்மை என்று எண்ணி, யதார்த்த சிந்தனையுடன் சென்று விட்டான்.

மூன்றாம் மாணவன், அச்செய்தியில் உள்ள உண்மைத் தன்மையை அறிய, ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளின் துணை கொண்டு பகுத்தாய்ந்து, உறுதியான நிலைபாட்டை எடுக்கிறான்.

இத்தகைய சிந்தனையே போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகளை எதிர்கொள்ள தேவையானதாகும். ஆகவே மாணவர்கள் எந்த நேரத்திலும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளை உங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும்.

அரசும், அதன் அங்கமாகிய ஆசிரியர்களும் உங்களுக்கு நல்ல பாதையை மட்டுமே காட்ட முடியும். ஆனால் நீங்கள்தான் அந்த பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்து முன்னேற உங்களை தயார்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையுரை ஆற்றினார். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நன்றி கூறினார்.

இந்த விழாவின்போது தொடங்கப்பட்ட 25 பயிற்சி வகுப்புகளும் அந்தந்த ஊரில் இருந்து காணொலிக் காட்சி மூலம் விழா மேடைக்கு இணைக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் எடப்பாடி, தேனி, தூத்துக்குடி பயிற்சி வகுப்புகளுடன் விழா மேடையில் இருந்தபடி முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் ஆகியோர் தொடர்புகொண்டு பேசினர். பயிற்சி கையேடுகளை விழா மேடைக்கு வந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மாணவ, மாணவிகள் வாங்கினர்.

மேலும் செய்திகள்