ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்ட துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்ட

Update: 2017-11-13 22:30 GMT

சென்னை,

நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்ட துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுமான வெற்றிவேல், பார்த்திபன், தங்க தமிழ்செல்வன், ரெங்கசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 18–ந் தேதி தன் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, இந்த தீர்மானத்துக்கு எதிராக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.

இதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி சட்டசபை சபாநாயகரிடம் கடந்த பிப்ரவரி 20–ந் தேதி மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது சபாநாயகர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால், முதல்–அமைச்சருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழக கவர்னரிடம் நாங்கள் மனு கொடுத்தோம்.

இதுகுறித்து அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாங்கள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அரசு கொறடா எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவும் இல்லை. அவரது உத்தரவை மீறி நாங்கள் செயல்படவும் இல்லை. ஆனால், முதல்–அமைச்சர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போடவேண்டும் என்ற கொறடாவின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தான் செயல்பட்டுள்ளனர். எனவே, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தொடரப்பட்ட பிற வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக கூறி, விசாரணையை வருகிற 16–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி சபாநாயகருக்கும், அரசு கொறடாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்