சவுமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை நிறுவனங்களுக்கு மீண்டும் சூட்ட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சவுமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை நிறுவனங்களுக்கு மீண்டும் சூட்ட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கை மத்திய மாநிலத்தில் தமிழர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டிருந்த சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயரை சிங்கள அரசு நீக்கியிருக்கிறது. சுயநலம் பாராமல் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக கடைசி வரை போராடிய ஒரு தலைவரின் பெயரை மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான அரசு நீக்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
பன்னாட்டு உதவியுடன் அமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி மையத்தின் பெயரை சிலரின் தனிப்பட்ட வெறுப்புக்காக நீக்குவது முறையல்ல. கலாசார மையம், விளையாட்டுத் திடல் ஆகியவற்றுக்கு சூட்டப்பட்ட தொண்டமானின் பெயரை நீக்க எந்த காரணமும் இல்லை. எனவே இம்முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
தொழிற்பயிற்சி மையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு சூட்டப்பட்டிருந்த சவுமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டதை தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாக மலையகத் தமிழர்கள் கருதுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்களுக்கும் மீண்டும் சவுமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை அரசு சூட்ட வேண்டும். இது நடக்கும் வரை இதற்கான அழுத்தத்தை இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.