வருமானவரி அதிகாரிகளை சோதனை செய்ய வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திவாகரன் ஆதரவாளர்கள் 20 பேர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகளையும் சோதனை செய்ய வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திவாகரன் ஆதரவாளர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-11-10 22:00 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி அருகே மன்னனை நகர் பகுதியில் உள்ள திவாகரன் வீடு, சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரி உள்பட 6 இடங்களில் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.

அப்போது வெளியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சில ஆவணங்களுடன் கூடிய பைகளை உள்ளே கொண்டு செல்ல முயற்சிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளையும் சோதனை செய்ய வேண்டும் என திவாகரன் ஆதரவாளர்கள் கூறினர்.

மேலும் அதிகாரிகள் வந்த காரை மறித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வெளியே காரை நிறுத்தி விட்டு கல்லூரிக்குள் நடந்து சென்று சோதனை நடத்தினர்.

பின்னர் கல்லூரி முன் கூடியிருந்த திவாகரன் ஆதரவாளர்கள் 12 பேரையும், அவரது வீடு முன்பு கூடியிருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்