வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் திருமாவளவன் பேட்டி

சசிகலா உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திருமாவளவன் கூறினார்.

Update: 2017-11-09 19:38 GMT
திருச்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு, தமிழக அரசில் தீவிரமாக தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை தனது பினாமி அரசாக மாற்ற பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக ஆட்சியாளர்களை சுதந்திரமாக செயல்படவிடவில்லை.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த சசிகலா உறவினர்களது வீடுகள், ஜெயா டி.வி. அலுவலகம் உள்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

வருமான வரித்துறை அதிகாரம் படைத்த அமைப்பு. வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் வருமான வரித்துறையை பயன்படுத்துவது அந்த துறையின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகும்.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. தங்களது தோல்வியை மறைக்க, பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடுவது நல்லது.

சென்னை வந்த பிரதமர் மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று பாரதீய ஜனதா தரப்பில் கூறப்பட்டு உள்ளது. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினும் இந்த சந்திப்பு இயல்பானது அரசியல் எதுவும் பேசப்படவில்லை என கூறி இருக்கிறார்.

ஆனால் இந்த சந்திப்பு தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க. கூட்டணி நண்பர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் எத்தனையோ முறை சென்னை வந்த மோடி அப்போது எல்லாம் பார்க்காமல் இப்போது திடீர் என கருணாநிதியை சந்திக்கவேண்டிய நிலைப்பாட்டை எடுத்தது ஏன்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

எனவே இது இயல்பான சந்திப்பு தான் என்றாலும் தி.மு.க. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. இதனால் தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் உறவில் உரசல் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்