வருமான வரித்துறையினரையே சோதனை செய்த தினகரன் ஆதரவாளர்கள்

சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவுகளை, வீட்டுக்கு வெளியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர்.

Update: 2017-11-09 12:11 GMT


டிடிவி தினகரன் வீடு உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி சென்ற உணவில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என டிடிவி ஆதரவாளர்கள் சோதனை நடத்தி உள்ளே அனுமதித்தனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலாவின் உறவினர்கள் அனைவரது வீடுகளும் சோதனைக்கு ஆளாகியுள்ளது.

ஐதராபாத் கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 ஆணையர்கள் ரெய்டுக்கு வருகை தந்துள்ளனர். சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை ஊழியர்கள் 1,800 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகன் விவேக் வீட்டில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்கவும் இல்லை, அதேபோல வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
 
இதையடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவுகளை, வீட்டுக்கு வெளியில் இருந்த தினகரன் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர்.

உணவு பொட்டலங்களோடு அதிகாரிகள் தேவையில்லாத ஆவணங்கள் எதையாவது சேர்த்து வீட்டினுள் வைத்து விடலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்