கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் தாக்கல் தலைமை செயலாளருக்கு, ஐகோர்ட்டு கண்டனம்

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Update: 2017-11-07 22:30 GMT
சென்னை,

ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக அமல்படுத்துவது இல்லை என்பதால் தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் அதிக அளவில் தாக்கல் செய்யப்படுகிறது என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை கோயம்பேட்டில் சோமு உட்பட 12 பேருக்கு சொந்தமான நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்தது. ஆனால், எந்த காரணத்துக்காக இந்த நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டதோ, அதற்காக அவை பயன்படுத்தப்படவில்லை. அதனால், அந்த நிலங்களை திருப்பி ஒப்படைக்கக்கோரி ஐகோர்ட்டில் 12 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிலங்களை மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதன்பின்னரும் நிலத்தை ஒப்படைக்காததால், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்டோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை மனுதாரர் சோமு உள்பட 12 பேர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர், ‘ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசு எப்படி காற்றில் பறக்க விடுகிறது? என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். எனவே, இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் எதிர்மனுதாரர்களான தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை முன்னாள் செயலாளர் தர்மேந்திரபிரதாப் யாதவ், தற்போதைய முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் விஜய ராஜ்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதன்படி, இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 அதிகாரிகளும் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள், ‘2013-ம் ஆண்டு பிறப்பித்த இந்த உத்தரவை இதுவரை அரசு அதிகாரிகள் அமல்படுத்தாமல் உள்ளனர். இதுபோல பல உத்தரவுகளை அரசு அமல்படுத்தப்படாமல் உள்ளன. இதனால், தேவையில்லாமல் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்படுகின்றன. ஒரு வழக்கில் பிறப்பிக்கப்படும் தீர்ப்பை அமல்படுத்த, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு என்று தனியாக ஒவ்வொரு வழக்காடிகளும் தாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் உயர் அதிகாரிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் 4 பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டோம்’ என்று கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

அப்போது, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் தரப்பில் கூறப்பட்டது. இதைதொடர்ந்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘மனுதாரர்களின் நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு விட்டது. அதனால், அவர்களுக்கு வேறு நிலங்கள் வழங்கப்படும்’ என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான பதில் மனுவை நாளை (இன்று) தாக்கல் செய்யவேண்டும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தொடரும் வரை, இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

இதனால், ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்துவதற்காக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசுக்கு எதிராக ஏராளமான கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளன. அதேநேரம், அண்டை மாநிலமான கேரளாவில் இதுபோன்ற நிலை இல்லை. கேரளா ஐகோர்ட்டில், அம்மாநில அரசுக்கு எதிராக ஒரு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு கூட நிலுவையில் இல்லை.

மேலும், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருக்க, உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும் என்று மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் பழக்கமும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளிடம் உள்ளன.

ஒரு வழக்கு என்றால், அது முடிவுக்கு வரவேண்டும். அவ்வாறு முடிவுக்கு வரும்போது கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளின் பலன்களை, சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வாழ்நாளில் அனுபவிக்கும் விதமாக இருக்கவேண்டும். கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் அதிக எண்ணிக்கையில் தாக்கலாவதால், இந்த ஐகோர்ட்டின் பொன்னான நேரமும் வீணாகி போகிறது. தற்போது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக தலைமை செயலாளர் கூறியுள்ளார். எனவே, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளின் விவரங்களை, அட்வகேட் ஜெனரல் மூலமாக தலைமை செயலாளருக்கு, ஐகோர்ட்டு (நீதித்துறை) பதிவாளர் வழங்க வேண்டும்.

நிலுவையில் உள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, எல்லா துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும், தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக அந்த அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்