அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து காஞ்சீபுரம் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் முழுமையாக அகற்றவில்லை. அவ்வப்போது கண்துடைப்பு நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் வெள்ளநீர் புகுந்து வரதராஜபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. தற்போது பெய்த மழையால் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வரும் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்புக்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை ஐகோர்ட்டு தானாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
கண்கூடாகத் தெரிகிறது
அப்போது நீதிபதிகள், ‘அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தாலும், அதன்பிறகு வெள்ளத்தை தடுக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. நீர்நிலைகளில் எப்படி ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கிறீர்கள்?’ என்று அரசு வக்கீல் டி.என்.ராஜகோபாலிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘அடையாறில் மொத்தம் 182 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. இன்னும் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பருவ மழையை கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புக்களை அகற்றும்பணி நடைபெற்று வருகிறது’ என்றார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இதைதொடர்ந்து, அடையாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அடையாறில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வருகிற 13-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.