உடல்நல குறைவு: குமரி அனந்தன் ஆஸ்பத்திரியில் அனுமதி
குமரி அனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், மதநல்லிணக்கம், மது ஒழிப்பு மற்றும் பாரத மாதா கோவில் கட்ட வலியுறுத்தி சென்னையில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டிக்கு பாத யாத்திரையாக சென்றதோடு, உண்ணாவிரதமும் மேற்கொண்டார். சென்னை திரும்பியதும் இதே கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்தநிலையில் நேற்று (நேற்று முன்தினம்) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோவில் கட்டுவது குறித்து குமரி அனந்தன் வலியுறுத்தினார். உரிய ஆவண செய்வதாக முதல்-அமைச்சரும் உறுதி அளித்தார். தொடர்ந்து நடைபயணம் மற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் குமரி அனந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று (நேற்று) காலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மேற்கண்ட தகவல்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.