ஜி.எஸ்.டி.க்கு எதிரான கருத்து: ‘மெர்சல்’ படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக கருத்துகளை கொண்ட, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2017-10-24 03:45 GMT

சென்னை,

சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிராக கருத்துகளை கொண்ட, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம், கடந்த 18–ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், மெர்சல் திரைப்படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

மெர்சல் என்ற தமிழ் திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். இந்த படத்தில், தேச ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிரான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 குறித்தும், வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டம் குறித்தும், தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து கடந்த 20–ந் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் மனு அனுப்பினேன்.

ஜி.எஸ்.டி. வரி குறித்து தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கும், இந்த திரைப்படத்துக்கு ‘சென்சார்’ சான்றிதழ் எப்படி வழங்கப்பட்டது? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் கதாநாயகன் ஜோசப் விஜய், ‘மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்துகொடுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், 7 சதவீதம் தான் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கிறது. ஆனால், இலவச மருத்துவ வசதிகளை செய்துகொடுக்காத இந்தியாவோ, 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை வசூலிக்கிறது’ என்று வசனம் பேசியுள்ளார். இது தவறான தகவலாகும். இந்த பொய்யான தகவல் மக்களை தவறாக வழி நடத்தும் விதமாக உள்ளது.

உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற ஆஸ்பத்திரிகளை நாடு முழுவதும் மத்திய அரசு நடத்துகிறது. மாநில அரசு மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரிகளுடன் கூடிய ஆஸ்பத்திரிகளையும், குக்கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் நடத்தி, இலவச மருத்துவ சேவைகளை வழங்குகிறது.

ஆனால், சிங்கப்பூர் அரசாங்கம், தங்களது மக்களிடம் இருந்து ‘மெடிசேவ்’ என்ற திட்டத்தின் கீழ் 8 முதல் 10 சதவீத வரிகளை பெற்று, குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இலவச மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த உண்மையை தெரியாமல், பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, நம் நாட்டில் இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்ற எண்ணத்தை திரைப்படத்தை பார்க்கும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை. ‘மரணத்தை ஏற்படுத்தும் மதுவுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படவில்லை. உயிரை காக்கும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுவதாகவும்’ நடிகர் விஜய் வசனம் பேசியுள்ளார்.

இதுவும் தவறானது. மதுவுக்கு 58 முதல் 150 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வந்தால், 28 சதவீதத்துக்கு மேல் வரி வசூலிக்க முடியாது. அதனால், ஜி.எஸ்.டி. வரியின் கீழ் மதுவை கொண்டுவரவில்லை. இதை தெரியாமல், மதுவுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலு, வெளிநாட்டினரிடம் பேசும் ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ‘இந்தியாவில் பணம் இல்லை. எல்லாம் டிஜிட்டல் முறையாக மாறிவிட்டது’ என்று கூறிவிட்டு, கையை நக்குவது போல நடித்துள்ளார்.

வெளிநாட்டினரின் மனதில், இந்தியாவை பற்றி கெட்ட எண்ணம் தோன்றும் விதமாக இந்த காட்சி உள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக டிஜிட்டல் முறை நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை மெர்சல் படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர்.

கே.ஏ.அப்பாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘கருத்து சுதந்திரம் என்பது பணம் சம்பாதிக்க திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட்ட உரிமமாக கருதக்கூடாது. புத்தகம் படிப்பதாலோ, ஓவியம், சிலைகளை பார்ப்பதாலோ, பிறரது பேச்சை கேட்பதாலோ ஏற்படுகிற தாக்கத்தைவிட, பல மடங்கு அதிக தாக்கத்தை திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், மக்கள் மனதில் உருவாக்குகின்றன’ என்று ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மெர்சல் படத்துக்கு அவசர கதியில் ‘சென்சார்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சென்சார் சான்றிதழ் கேட்டு, கடந்த 16–ந் தேதி தான் விண்ணப்பம் அளித்துள்ளனர். விண்ணப்பம் பெற்று ஒரே நாளில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், ஜி.எஸ்.டி. வரி, ‘டிஜிட்டல்’ இந்தியா திட்டம் உள்ளிட்டவைகள் குறித்தும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், மெர்சல் படத்தை பொதுமக்களுக்கு திரையிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட ‘சென்சார்’ சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்