வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு:மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தனியார் துறை இடஒதுக்கீடு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2017-10-19 20:04 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களிலும், பெரு நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று நிதி ஆயோக் அமைப்பு கூறியுள்ளது. சமூக நீதிக்கு எதிரான இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தனியார் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் தான் வேலைவாய்ப்பை வழங்கும் ஆதாரமாக திகழப்போகின்றன. அவ்வாறு இருக்கும்போது அவற்றில் இடஒதுக்கீடு வழங்குவது தான் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நீதியாக அமையும். அதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியாக இருந்தாலும் அதை மக்கள் இணைந்து முறியடிக்க வேண்டும்.

நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் தனியார் துறை இடஒதுக்கீடு கோரிக்கையை விரைந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்