தமிழக அரசு அனுமதி அளித்தால் டெங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தயார்

தமிழக அரசு அனுமதி அளித்தால் மக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராக உள்ளதாக நடிகர் விவேக் பேசினார்.

Update: 2017-10-15 21:45 GMT

சென்னை,

சென்னை அடையாறு புற்றுநோய் மைய வளாகத்தில் அப்துல்கலாமின் 86–வது பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விவேக் மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகர் விவேக் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 86–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையிலுள்ள 86 இடங்களில் 86 வகையான மரங்கள் நட உள்ளோம். கலாமின் அறிவுறுத்தலின் படி கடந்த 2010–ம் வருடம் ‘பசுமை கலாம்’ என்ற அமைப்பினை தொடங்கி அதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இதுவரை 28 லட்சத்து 90 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அந்த மரக்கன்றுகளை சுற்றி தற்போது இரும்பு கூண்டுகள் அமைத்து பாதுகாத்து வருகிறோம்.

சென்னையில் இதுவரை பெரியதாக மரக்கன்றுகளை நட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதனை நீக்கும் பொருட்டு கலாமின் பிறந்த நாளான இன்று(நேற்று) சென்னையில் மரம் நட வேண்டும் என விரும்பினேன். அதன் அடிப்படையில் அடையாறு புற்றுநோய் மைய வளாகத்தில், அதன் தலைவர் டாக்டர் சாந்தா தலைமையில் ஒரு வேப்ப மரக்கன்றுவை நட்டுள்ளோம்.

இதனை தொடர்ந்து வட சென்னை, தென் சென்னை என 86 இடங்களில் 86 வகையான மரக்கன்றுகளை நடுகிறோம். மரங்களை வளர்ப்பதில் அரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இருவருக்குமே அந்த பொறுப்பு உள்ளது. சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட வார்தா புயலினால் மிகப் பெரிய மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. அதை சரி செய்ய ராஜமுந்திரியில் இருந்து பெரிய மரங்களை கொண்டு வந்து, அதே இடத்தில் மீண்டும் மரங்களை நட அரசு முயற்சி செய்ய வேண்டும்.

தற்போது, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நான் தயாராக உள்ளேன். அது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் அனுமதி அளித்தால் நான் களத்தில் இறங்கி மக்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தயாராக உள்ளேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா பேசியதாவது:–

கல்வியிலும், இளைஞர்களின் வாழ்விலும் அப்துல் கலாமின் பங்களிப்பு என்பது அளப்பரியது. பசுமையான பாரதத்தை உருவாக்குவதிலும் மிகவும் முனைப்பு காட்டியவர். தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி அடைய செய்ய, பொதுமக்கள் தங்களது பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நாம் நலமுடன் வாழ அது வழிவகை செய்யும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்