கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று 788 தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-10-15 22:45 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. படிப்பு, வேலை, வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கியிருக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்வது வழக்கம்.

மக்கள் பயணம் செய்ய ஏதுவாக இந்த ஆண்டு, 15–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் நேற்று புறப்பட்டன.

முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 788 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனுடன் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும் சேர்த்து சென்னையில் நேற்று மொத்தம் 3,063 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.

சென்னை கோயம்பேடு பஸ்நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பயணிகள் வசதிக்காக நேற்று சென்னையில் அண்ணாநகர்(மேற்கு), தாம்பரம் புதிய பஸ் நிலையம்(மெப்ஸ்), பூந்தமல்லி பஸ் நிலையம் மற்றும் சைதாப்பேட்டை பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இன்று (திங்கட்கிழமை) 1,844 சிறப்பு பஸ்களும், நாளை (செவ்வாய்க்கிழமை) 2,188 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இன்றும், நாளையும் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாலும், வாகனங்கள் மூலமாக பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதாலும் பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. புறநகர் பகுதியான தாம்பரம்–வண்டலூர் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு வாகனமும் நத்தை போன்று ஊர்ந்து சென்றது.

பஸ் நிலையங்களை போன்று ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பயணிகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டும் வழிப்பறி திருடர்கள், ஜேப்படி திருடர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாறுவேடத்திலும் போலீசார் பஸ், ரெயில் நிலையங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ், ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் உடைமைகளையும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்