தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு

தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் புதிய படங்கள் வெளியிட தடை நீங்கியது.

Update: 2017-10-14 00:15 GMT
சென்னை,

சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 30 சதவீதம் என தமிழக அரசு நிர்ணயித்தது.

இந்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள நிலையில், 30 சதவீத கேளிக்கை வரிச்சுமையை தாங்கி சினிமா தொழிலை தொடர முடியாது என்று தமிழ் திரையுலகினர் கொந்தளித்தனர்.

கேளிக்கை வரியை நீக்கும் வரை தமிழ் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் என்று அரசு நிர்ணயித்தது.

இதற்கிடையே கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக சினிமா திரையுலகினரை தமிழக அரசு அழைத்து பேசியது. அரசு தரப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி பங்கேற்றனர்.

தமிழ் திரையுலகினர் தரப்பில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கம், சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் உள்பட பல சங்கங்கள் பங்கேற்றன. 3 நாட்களாக தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு தேவையான உதவிகளை கருணாஸ் எம்.எல்.ஏ. செய்தார்.

3-ம் நாள் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் திரையுலகினர் சந்தித்து பேசினர்.

பின்னர் தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ் சினிமாக்களுக்கு கேளிக்கை வரி என்பது 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர் அனுமதி கட்டணங்களை அரசு மாற்றி அமைத்துள்ளது.

மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி உள்ளது. அதையும் மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை கேட்ட முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கருணாசுக்கு நன்றி.

எனவே புதிய படங்கள் வெளியாவதில் தடை நீங்கியது. தீபாவளிக்கு திட்டமிட்டபடி புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்